தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க திமுக-வும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக-வும், முதன்முறையே அரியணையில் ஏற தவெக-வும் களத்தில் குதித்துள்ளது.
அதிருப்தியை காட்டிய பிடிஆர்:
இந்த நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிகள் திமுக மீதான விமர்சனங்களை தொடர்ந்து அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
அதற்கு ஏற்றாற்போலவே, திமுக-வில் தொடர்ந்து இன்னல்களும், இடர்களும் ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழலில், நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளார்.
தொடரும் சர்ச்சைகள்:
தனது துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், யாரிடம் நிதியும், திறனும் இருக்கிறதோ? அவர்களிடம் கேளுங்கள் என்று அவர் கூறிய பதில் திமுக-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தவர் பிடிஆர். ஆனால், சில காரணங்களால் அவரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து தங்களது சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் சிக்கி வருகின்றனர். அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, நாசர் என்று பலரும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மிகவும் இழிவாக பேசிய பேச்சு பொதுமக்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.
சரி செய்வாரா மு.க.ஸ்டாலின்?
இந்த சூழலில், அமைச்சர் பிடிஆர் வெளிப்படையாகவே சட்டசபையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது கட்சிக்குள் நடக்கும் மூத்த தலைவர்களுக்கு இடையேயான பனிப்போரை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய திமுக-வில் மிகச்சிறந்த நிர்வாகியாகவும், பன்திறன் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவராக திகழ்பவர் பிடிஆர். ஆனால், அவரே சட்டசபையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது திமுக தொண்டர்களுக்கு வேதனையை ஏற்படு்த்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து இதுபோன்று நெருக்கடிகளை பொதுவெளியில் ஏற்படுத்துவது முக ஸ்டாலினுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் முடியும் வரை இதுபோன்ற சிரமம் ஏற்படாமல் இருப்பதை தடுக்க மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகளையும், தீர்வுகளையும் காண்பார் என்று திமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.














