தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் நேற்று உலகெங்கும் ரிலீசான திரைப்படம் குட் பேட் அக்லி.
குட் பேட் அக்லி ரிலீஸ்:
இந்த படம் அறிவிப்பு வெளியானது முதலே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. படத்தின் போஸ்டர், அஜித்தின் லுக் எதிர்பார்ப்பை ஏற்ற படத்தின் டீசரும், ட்ரெயிலரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அஜித்குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டின் டானாக ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் இந்த படத்தில் கேங்ஸ்டராகவே நடித்துள்ளார்.
ஏகே டூ ரெட் டிராகன்:
அவரது முந்தைய படங்களான தீனா, பில்லா ஆகியவற்றின் ரெஃபரென்ஸ்களை படத்தின் திரைக்கதையில் சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். பழைய அஜி்த்தின் தோற்றம், ஆங்காங்கே ஒலிக்கப்பட்ட 80, 90ஸ் பாடல்கள், சிம்ரனின் சிறப்புத் தோற்றம் படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆகும்.
ஏகே ரெட் டிராகன் ஆனது எப்படி என்பதை குறிப்பதற்கான ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த 3 கேமியோக்கள் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகும். அந்த காட்சிகளில் திரையரங்குகளில் விசில் சத்தம் தெறித்தது. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை அஜித் இந்த படத்தை தாங்கிப்பிடித்துள்ளார்.
ஃபேன்பாய் சம்பவம்:
படத்தில் அஜித்திற்கு நிகரான மற்றொரு வேடம் அர்ஜுன்தாஸ், இதுவரை குரூரமான நடிப்பில் மட்டுமே பார்த்து வந்த அர்ஜுன்தாசை இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் காண முடிவதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
இந்த படத்தை முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்துள்ளார். கதையாக இந்த படத்தில் பெரியளவு ஏதும் இல்லாவிட்டாலும், திரைக்கதை மிக மிக அருமையாக இருந்தது. ஃபேன்பாய் சம்பவம் என்று தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பேசப்பட்டு வரும் வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தத்தை ஆதிக் ரவிச்சந்திரன் காட்டியுள்ளார்.
அஜித் ரசிகர்களுக்கு விருந்து:
தல ஏகேவாக மாறினாலும், அந்த ஏகே-வை ரெட் டிராகனாக மாற்றியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவின் ரெட் டிராகனாகவும் அஜித் புது அவதாரம் எடுத்துள்ளார். மேலும், இந்த படத்தின் பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ் அசத்தியுள்ளார். தீவிர விஜய் ரசிகரான ஜிவி பிரகாஷ், தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதை அஜித்தின் இந்த குட் பேட் அக்லி படத்தில் காட்டியுள்ளார்.
சுனில் அளவுக்கு பிரசன்னாவிற்கு காட்சிகள் இல்லாதது சிறிய குறையாக உள்ளது. ஆனாலும், கிளைமேக்சில் அவருக்கும் ஒரு சண்டை காட்சி இருந்தது. முழுக்க முழுக்க ரசிகர்கள் மகிழ்ச்சியாக ரசித்து பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த படம், அஜித் ரசிகர்களின் கிரீடத்தில் தனித்துவமான வைரக்கல்லாக ஜொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.














