தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் தனுஷ் இயக்குனராகவும் வெற்றி பெற்று வருகிறார். முதல் படமான பவர்பாண்டியில் மென்மையான காதல் கதையை கையாண்டு ரசிகர்கள் மனதில் இயக்குனராக வெற்றி பெற்றவர்.
ராயன் வெற்றி:
தற்போது தனது இரண்டாவது படமான ராயனில் பக்கா கமர்ஷியல் இயக்குனராகவும் வெற்றி பெற்றுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ராயன் அண்ணன் – தம்பி – தங்கை சென்டிமென்ட் படமாக வெளியாக தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷிற்கு ராயன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பிற்கு உயிர் கொடுத்துள்ளனர். குறிப்பாக அபர்ணா முரளி மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் அசத்தியுள்ளனர். சமீபகாலமாக தொடர் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷிற்கு ராயன் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
மீண்டும் பிசியான தனுஷ்:
ராயன் பிரம்மாண்ட வெற்றி பெற்று வரும் சூழலில், தனுஷ் தனது அடுத்த பட வேலைகளிலும் பிசியாகியுள்ளார். இந்தியில் ஒரு படம் நடித்து வரும் தனுஷ், தமிழில் தான் இயக்கும் ஒரு படத்தின் வேலைகளிலும் பிசியாகி வருகிறார். இந்தியன் 2 படம் பெரியளவில் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், ராயன் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ராயன் படத்துடன் வெளியான ஹாலிவுட் திரைப்படமான டெட்பூல் மற்றும் வோல்வரின் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.














