ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து அடுத்த கட்டம் இன்று தொடங்குகிறது. ப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியானா குவாலிபயர் 1 போட்டி இன்று நடக்கிறது. நடப்பு தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அணிகளாக திகழ்ந்த கொல்கத்தா – ஹைதரபாத் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள். அகமதபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் அந்த அணியின் பலமாக பார்க்கப்படுவது சுனில்நரைன். அவருக்கு ஆட்டம் பிடித்துவிட்டால் ரன்களை ஜெட் வேகத்தில் ஏற்றிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவருக்கு சால்ட் ஒத்துழைப்பு தருகிறார். ரகுவன்ஷி, ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். இறுதிக்கட்டத்தில் ரிங்குசிங், ரஸல் அதிரடியாக ஆட வேண்டியது அவசியம்.
விறுவிறுப்பு:
பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ரஸல் உள்ளனர். கோப்பையை வெல்ல இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கொல்கத்தா அணி ஆர்வத்துடன் விளையாடும்.
சன்ரைசர்ஸ் அணி இந்த தொடரில் பல அணிகளின் சாதனையை முறியடித்துள்ளது.
அந்த அணிக்கு பெரும் பலமாக இருப்பது பேட்டிங். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக மிரட்டி வருகின்றனர். திரிபாதி, கிளாசென், நிதிஷ் ரெட்டி என மிடில் ஆர்டரும் பலமாக உள்ளது. கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது ஆகியோரும் பின்வரிசையில் உள்ளனர்.
பந்துவீச்சில் நடராஜன், விஜயகாந்த், கம்மின்ஸ், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது உள்ளனர். இதனால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.













