மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டத்திலே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ம.க. – பா.ஜ.க. கூட்டணி:
தமிழ்நாட்டில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, தொகுதி ஒதுக்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், அ.தி.மு.க. தனது பக்கம் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை இழுக்க தீவிர கவனம் செலுத்தி வந்தது. ஆனால், இன்று பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிட கட்சிகளுடன் கூட்டணியே இல்லை என்று கூறி வந்த பா.ம.க. கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்தது. தற்போது, தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில் பா.ம.க. அவர்களுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்துள்ளது.
வட தமிழகத்தில் உள்ள 10 தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ம.க.வின் இந்த முடிவு அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோதே பா.ம.க. மீது அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
தொண்டர்கள் அதிருப்தி:
தற்போது, அ.தி.மு.க.வே கழட்டிவிட்ட பா.ஜ.க.வுடன் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பா.ம.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவே விருப்பமாக இருந்தது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டில் தோற்றாலும், அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும், அதன் மூலம் மத்திய இணையமைச்சர் பதவியையும் பெறலாம் என்ற எண்ணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
பா.ம.க.வின் இந்த கூட்டணி விவகாரம் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.













