இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார சுழலில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி இதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அஸ்வின் புதிய வரலாறு:
இந்திய அணி இந்த தொடரில் அபார வெற்றி பெற்றதற்கு சுழற்பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம் ஆவார்கள். குறிப்பாக, தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அஸ்வின் பங்கு அளப்பரியது. அவர் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
டெஸ்ட் கிரிக்கெட் 147 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இதில் அறிமுக டெஸ்ட் போட்டியிலும், 100வது டெஸ்ட் போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 100 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான அஸ்வின் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றிக்கு காரணம்:
அதன்பின்பு, இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளிலும் பிரிக்க முடியாத அங்கமாக திகழ்ந்த அவர் தோனி கேப்டன்சிக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா கேப்டன்சியில் அவ்வப்போது பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அழைக்கப்படும் அஸ்வின் இந்த தொடரிலும் இடம்பிடித்தார்.
தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் அவரது 100வது டெஸ்ட் ஆகும். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் ஜாக் கிராவ்லி, டக்கெட், ஒல்லி போப், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் என இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்தார். இதன் காரணமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
மேலும், 100வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வினைப் போலவே வார்னே, முரளிதரன் 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்தவர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு அந்த பெருமை சென்று சேர்கிறது.













