இந்திய திரையுலகின் மிக மிக பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். பவதாரிணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.
பவதாரிணி மறைவு
இந்த நிலையில், பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பவதாரிணி கடந்த சில மாதங்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இலங்கையில் அவர் ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இலங்கையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 47 ஆகும். பவதாரிணி மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பவதாரிணி கடந்த 1976ம் ஆண்டு ஜூலை 23ம் ஆண்டு பிறந்தவர். ராசய்யா என்ற படத்தின் மூலமாக தமிழில் பாடகியாக அறிமுகமானார். இளையராஜா இசையில் ராமன் அப்துல்லா என்ற படத்தில் என் வீட்டு ஜன்னல் என்ற பாடலே அவர் பாடிய பாடல் ஆகும்.
இசையமைப்பாளர், பாடகி:
தந்தை இசை மட்டுமின்றி சகோதரரான யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்ல என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார். இளையராஜா இசையில் பாரதி படத்தில் இடம்பெற்ற மயில்போல பொன்னு ஒன்னு என்ற பாடல் பவதாரிணி பாடியது. அந்த பாடலுக்காக அவர் தேசிய விருது வென்றார். புதிய கீதை படத்தில் இடம்பெற்ற மெர்க்குரி பூவே என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார்.
சென்னையில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளியில் பவதாரிணி படித்தார். பஇவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார். தமிழ் மட்டுமினவ்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அவர் பாடியுள்ளார். இசையமைப்பாளராக ரேவதி இயக்கி மித்ர் மை ப்ரண்ட் என்ற படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் அவுனா என்ற படத்திற்கு இசையமைத்தார். இந்தியிலும் 2004ம் ஆண்டு இசையமைத்தார்.
தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, போரிட பழகு, கள்வர்கள், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா மட்டுமின்றி தேவா மற்றும் சிற்பி ஆகியோரது இசையிலும் அவர் பாடியுள்ளார்.













