தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டது. திரையுலகின் சார்பில் கிண்டி ரேஸ் கோர்ஸில் விழா நேற்று நடைபெற்றது.
காற்று வாங்கிய கலைஞர் 100
ஒட்டுமொத்த திரையுலகமும் குவிந்து கருணாநிதிக்கு விழா எடுக்கப்படும் என்று எதிர்பார்த்த தி.மு.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஏமாற்றம் கிடைத்தது என்றே கூறலாம். ஏனென்றால், நேற்று நடந்த கருணாநிதி 100 விழாவிற்கு திரையுலகின் ஜாம்பவான்களாகிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும், முன்னணி நடிகர்களான சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என பலரும் வந்திருந்தும் விழாவிற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தன.
தற்போது இந்த காலி இருக்கைகள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களில் பலரும் நாங்கள் அஜித் மற்றும் விஜய்யை எதிர்பார்த்தே வந்தோம். அவர்கள் வராதது ஏமாற்றமாக உள்ளது என்று கூறினார். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் பேசும்போதே பெரும்பாலான நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தன. இந்த விழாவில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசமாக வழங்கியிருந்தால் ஒரு வேளை எதிர்பார்த்த அளவு கூட்டம் வந்திருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
விஜய், அஜித் காரணமா?
இன்னும் சிலர் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் வராத காரணத்தாலே பெரும்பாலான ரசிகர்கள் இந்த விழாவை புறக்கணித்ததாகவும், அவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த விழாவை காண மக்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது தல, தளபதி என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸ் தளத்தில் கலைஞர் 100 விழாவின்போது முன்னணி நடிகர்கள் இருந்தும் விழா காற்று வாங்கியது தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவின்போதே அஜித் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நேற்றைய விழாவை தனது பாணியில் புறக்கணித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் தனது எதிர்கால அரசியல் கருதி இந்த விழாவை புறக்கணித்துள்ளார். நிச்சயமாக இவர்கள் இருவரில் ஒருவர் வந்திருந்தாலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்திருக்கும்.














