கிரிக்கெட் உலகில் டிசம்பர் 26ம் நாள் மிகவும் முக்கியமான நாள் ஆகும், கிறிஸ்துமசுக்கு அடுத்த நாளான இந்த நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. பாக்சிங் டே டெஸ்ட் ஆடும் பழக்கம் 1865ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாக்சிங் டே டெஸ்ட்:
முதன்முதலில் முதல்தர போட்டியாக விக்டோரியா அணிக்கும், நியூ சவுத்வேல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றுள்ளது. நவீன கிரிக்கெட் வளர்ச்சி அடையும் காலகட்டத்திற்கு முன்பு அதாவது 1980ம் ஆண்டு முதலே அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 26ம் நாள் ஆஸ்திரேலிய அணியினர் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட் பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் நாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகின் ஏதாவது ஒரு சர்வதேச அணியுடன் டெஸ்ட் போட்டியில் ஆடும். கடந்த 2013ம் ஆண்டு நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியே இதுவரை அதிக பேர் கண்டுகளித்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அந்த போட்டியை மட்டும் 2 லட்சத்து 71 ஆயிரத்து 865 பேர் தொலைக்காட்சி மற்றும் நேரடியாக கண்டுகளித்தனர். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1953ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் ஆடப்படவில்லை.
பாகிஸ்தானுடன் மோதும் ஆஸ்திரேலியா:
நடப்பாண்டிற்கான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரான இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,














