தி.மு.க. மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படத் தொடங்கிய பிறகு அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டு வந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வை எதிர்க்கட்சியாக அமரவைத்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது தலைமையில் தி.மு.க. அபார வெற்றி பெற்று முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.
மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகு அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப அதிகாரிகள் நியமனம், திட்டங்கள் என அவரது அறிவிப்புகளும் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. ஆனால், சமீபகாலமாக தி.மு.க. அரசு மீதான விமர்சனங்கள் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியாகவே அமைந்து வருகிறது.
தென்னிந்தியாவின் பலமிகுந்த அரசியல்வாதியாக மு.க.ஸ்டாலினை அனைவரும் கருதிக் கொண்டிருக்கும் சூழலில், அவரது அமைச்சரவையில் உள்ள செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றார். அதுவே மு.க.ஸ்டாலினுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி சிறைக்கு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவரது அமைச்சர் பதவியும். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோகியுள்ளது.
அமைச்சர்கள் தரும் இம்சை:
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவி இதேபோல நீதிமன்ற உத்தரவால் பறிக்கப்பட்டது. பாலகிருஷ்ண ரெட்டி அ.தி.மு.க.வில் அதிகாரமிக்க நபர் அல்ல என்பதால் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், தி.மு.க.வில் செல்வாக்கு மிகுந்த நபரான பொன்முடி, கொங்கு மண்டலத்தில் மிகவும் செல்வாக்கான செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் தற்போது குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வெள்ள நீர் ஒரு சொட்டு கூட தேங்காது என்று அமைச்சர்களும், சென்னை மேயரும் கூறிய நிலையில் சென்னையின் பல பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியதும், ஐ.ஓ.சி. நகர் உள்பட பல பகுதிகளில் 13 நாட்களுக்கு பிறகு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதும் மிகப்பெரிய அதிருப்தியை தி.மு.க. அரசு மீது ஏற்படுத்தியது.
தற்போது தென்மாவட்டத்தில் பெய்த பேய்மழையால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதும் அங்கு நடக்கிறது. வெள்ள மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என்று தலைமைச் செயலாளர் கூறினாலும், மக்கள் உயிரிழப்பு அங்கு வசிப்போரை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது.
அடி மேல் அடி:
மு.க.ஸ்டாலின் ஒரு மேடையில் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி போல என்று சொல்வது போல, அவருக்கு அமைச்சர்கள் பதவி பறிப்பு, அமைச்சர்கள் மீதான விமர்சனம், வெள்ளம், ஆளுநருடான மோதல், மக்களவை கூட்டணி என்று அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் அதன் தாக்கம் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.













