உத்தரபிரதேசத்தின் அயோத்தி விவகாரம் நாடு முழுவதும் அறிந்ததே. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, திட்டமிட்டபடி அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி ராமர்கோயில் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற உள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா:
கோயில் திறப்பு விழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் அங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முக்கிய பிரமுகர்களை அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். கோயில் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா இந்த விழாவில் பங்கேற்க 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு வழங்கியுள்ளது. அதில் 3 ஆயிரம் பேர் வி.வி.ஐ.பி. ஆவார்கள்.
அரசியல், வர்த்தகம், விளையாட்டு, பிரபலங்கள் என்று நாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரபலங்களுக்கு இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர்களான ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்திற்கு அழைப்பா?
மேலும், 1987ம் ஆண்டு இந்தியா முழுவதும் பிரபலமான ராமாயணம் தொடரில் ராமர் – சீதையாக நடித்த அருண் கோவில் மற்றும் தீபிகா சிக்காலியா டோபிவாலாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இதுவரை யாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்புகள் பெருமளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.













