டிசம்பர் மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு மோசமான நாட்களாக மாறி விடுகிறது. இந்தாண்டும் அதற்கு விதி விலக்க என்பது போல மிக்ஜாம் புயல் வந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வந்த மழை நேற்று இரவு முதல் தீவிரம் அடைந்துள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை
தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அண்ணாசாலை, வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, பாரிமுனை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை என அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்களும் ஒர்க் ப்ரம் ஹோம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மிரட்டும் மிக்ஜாம்
இது வடக்கு – வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. நாளை முற்பகல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, நெடுங்குன்றம் பகுதியில் சாலைகளில் முதலை நடமாட்டம் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் மற்றும் வளசரவாக்கத்தில் 19 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.பெருங்குடியில் 18 செ.மீட்டர் மழையும், அடையாறில் 16 செ.மீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 17 செ.மீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 17 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருவதால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வடிய வைக்க மாநகராட்சி பணியாளர்கள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். மோட்டார் பம்புகள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடற்கரைகள், பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.














