இந்திய திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வருபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். சூப்பர்ஸ்டார் மற்றும் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
18 ஆண்டுகளுக்கு பிறகு மோதல்:
நிஜத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உலா வந்தாலும் திரைத்துறையில் ஒருவருக்கு ஒருவர் ஆரோக்கியமான, சமமான போட்டியாளர்களாக இருந்தனர். ஒரு காலத்தில் விழா நாட்களில், பண்டிகை நாட்களில் தியேட்டர்களில் இவர்களது படங்கள்தான் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும். அப்போது, தியேட்டர்களே ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
மூத்த நடிகர்களான பிறகும், கதாநாயக அந்தஸ்துடன் உலா வரும் இவர்கள் இருவரது படங்களும் இப்போது நேருக்கு நேர் மோதுவது குறைந்துவிட்டது. இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடித்த படங்கள் சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன.
வரும் டிசம்பர் 8-ம் தேதி ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான முத்துவும், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படமும் நேருக்கு நேர் மோத உள்ளது.
முத்து – ஆளவந்தான்:
இவர்களது இருவரும் படங்களும் இதற்கு முன்பு கடந்த 2005ம் ஆண்டு மோதிக் கொண்டது. ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் படமான சந்திரமுகியும், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் மோதிக் கொண்டது.
அதில், சந்திரமுகி படம் ஒரு வருடம் வரை மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. ஆனால், மும்பை எக்ஸ்பிரஸ் படம் படுதோல்வி அடைந்தது. தற்போது ரீ ரிலீஸ் ஆக உள்ள படத்திலும் ரஜினிகாந்தின் முத்து படம் தமிழ்நாடு மட்டுமின்றி ஜப்பானிலும் வசூலில் பட்டையை கிளப்பிய படம் ஆகும். இந்த படத்திற்கு பிறகு ஜப்பானில் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
வெற்றி யாருக்கு?
கமல்ஹாசனின் மாறுபட்ட கெட்டப்பில் இரட்டை வேட படமாக வெளியான ஆளவந்தான் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படவில்லை. ஆனால், அந்த படத்தில் இடம்பெற்ற கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைத்துறையில் மிகப்பெரிய உச்சநட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த் – நடிகர் கமல்ஹாசன் திரைப்படங்கள் 18 ஆண்டுகளுக்கு மீண்டும் மோதுவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளவந்தான் படம் இந்த முறை ரசிகர்களால் விரும்பப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தற்போது ரஜினிகாந்த் தலைவர் 170 படத்திலும், கமல்ஹாசன் இந்தியன் 2, எச். வினோத் இயக்கும் படம், மணிரத்னம் படம் ஆகியவற்றில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.














