உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து லீக் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
பதிலடி தருமா இந்தியா?
சொந்த மண்ணில் ஆடும் இந்தியா 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இதே மைதானத்தில்தான் கைப்பற்றியது. அந்த போட்டிக்கு பிறகு நடந்த அடுத்த 2 உலகக்கோப்பையிலும் அரையிறுதி வரை சென்று இந்தியா தோற்றது. குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இதே நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. அதுவும், தோனி நூலிழையில் ரன் அவுட்டான சம்பவம் இந்திய ரசிகர்களை கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில், அந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி தரும் வகையில் அதேபோல ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மீண்டும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி தொடக்கத்தில் அபாரமாக ஆடினாலும் பின்னர் தொடர் சறுக்கல்களை பெற்று பின்னர் கடைசியில் 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சம பலம்:
அரையிறுதிக்கு பிறகு வெற்றி மட்டுமே செல்லும் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுவார்கள். சொந்த மண்ணில் ஆடும் இந்திய அணி இதுவரை ஆடிய அனைத்து லீக் போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நடப்பு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உள்ளது. நியூசிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் எப்போதுமே வலுவான அணியாகவே திகழ்கின்றனர். அவர்களும் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடி உள்ளது.
இந்திய அணியில் இந்த தொடர் தொடங்கியது முதல் பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக கேப்டன் ரோகித்சர்மாவும், விராட் கோலியும் உள்ளனர். சமீபத்தில் நடந்த போட்டிகளில் சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலும் அபாரமாக ஆடி வருவது இந்திய அணிக்கு பெரிதும் நம்பிக்கை அளிக்கிறது. சூர்யகுமார் யாதவிற்கு ஆடுவதற்கு பெரியளவு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவரது சொந்த மைதானமான வான்கடேவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் பட்டாசாக வெடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
பேட்டிங், பவுலிங்:
நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் பலமாக உள்ளனர். குறிப்பாக, ரச்சின் ரவீந்திரா இந்த தொடர் தொடங்கியது முதல் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஆடி வருகிறார். கான்வே, டாம் லாதம், பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் அசத்தக்கூடியவர்கள் என்பதால் அவர்களையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு பெரும் பலமாக இந்த தொடர் முழுவதும் பந்துவீச்சாளர்கள் செயல்படுகின்றனர். பும்ரா, சிராஜ், ஷமி வேகக்கூட்டணி எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றனர். சுழலில் குல்தீப் யாதவ், ஜடேஜா மிரட்டலாக வீசி வருகின்றனர். ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில், அணிக்குள் கம்பேக் கொடுத்த ஷமி ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.
இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?
நியூசிலாந்து அணியிலும் ட்ரெண்ட் போல்ட், பெர்குசன், சான்ட்னர், சவுதி, ரவீந்திரா முக்கிய பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். போல்டிற்கு ஏற்கனவே மும்பை மைதானத்தில் பந்துவீசிய அனுபவம் இருப்பதால் அது அவருக்கு கூடுதல் பலமாகும். மொத்தத்தில் சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றத் தயாராகும். இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.














