உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் பெரும்பாலும் முடிந்து இறுதிக்கட்டத்திற்கு உலகக் கோப்பைத் தொடர் வந்துள்ளது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில், அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அணி பிரகாசப்படுத்தியுள்ளது.
அரையிறுதி வாய்ப்பு?
ஆனாலும், தற்போது வரை நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முழுமையடையவில்லை. அவர்களுடன் அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் அணி மல்லுக்கு நிற்கிறது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அவர்களும் 10 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணியை சமன் செய்வார்கள்.
இது மட்டுமே வாய்ப்பு?
அவ்வாறு இரு அணிகளும் சம நிலைக்கு செல்லும்போது, யார் அரையிறுதிக்கு செல்வார்கள்? என்பதை தீர்மானிப்பது நெட் ரன் ரேட்டே ஆகும். அந்த வகையில் பாகிஸ்தானை காட்டிலும் நியூசிலாந்து அணிக்கே நெட் ரன் ரேட் பிரகாசமாக உள்ளது.
இந்த சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களது வாழ்வா? சாவா? போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணிக்கு அனைத்துமே சவாலாக மாறியுள்ளது.
ஏனென்றால், இங்கிலாந்தை வீழ்த்தி நெட் ரன் ரேட்டில் முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக இரண்டு விஷயங்களை செய்தாக வேண்டும்.
1. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் எதிரணியை 287 அல்லது 288 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். கடந்த போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து அணியை அவ்வாறு வீழ்த்த வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு மேல் டார்கெட் உருவாக்க வேண்டும்.
2. ஒரு வேளை இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கினால் 284 பந்துகள் மீதம் வைத்து வெல்ல வேண்டும். அதாவது, மொத்தம் உள்ள 300 பந்துகளில் இலக்கை வெறும் 15 பந்துகளில் அதாவத 2.3 ஓவர்களில் எட்ட வேண்டும் என்பது அசாத்தியமான ஒன்றாகும்.
டாஸ் முக்கியம்
இதனால், பாகிஸ்தான் அணி கைவசம் இருக்கும் ஒரே வாய்ப்பு முதலில் பேட் செய்யும்போது மட்டுமே. அதுவும் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தால் மட்டுமே அந்த வாய்ப்பு வசப்படும். போட்டியில் டாஸ் யார் வெல்வார்கள் என்பது டாஸ் போடப்படும்போது மட்டுமே தெரியும்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களது அரையிறுதி கனவு சாத்தியம் ஆகும். ரன் ரேட்டை பெறுவதற்கு பாகிஸ்தான் அணி அப்படியொரு வெற்றியை பெற்றால் மட்டுமே மும்பை, வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் ஆட முடியும். இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்குத்தான் கிடைக்கும்.













