உலகின் மிகவும் அபாயகரமான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். அதிநவீன தொழில்நுட்ப உதவியால் மருத்துவ துறையில் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் திறம்பட சிகிச்சை அளித்து குணப்படுத்துகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாக அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட் நிறுவனமும் செயல்படுகிறது.
மூளைப் புற்றுநோய் விழிப்புணர்வு:
அனைத்து வயதினரிடையேயும் நோயுற்ற தன்மை மற்றும் வாழ்வாதார இழப்புக்கு மூளைக் கட்டிகள் எனப்படும் ப்ரைன் டியூமர் முக்கிய காரணமாகும். மனிதனின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான மூளையில் ஏற்படும் முக்கிய பிரச்சினையான மூளைக்கட்டிகள் மற்றும் அவற்றின் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும், கட்டுக்கதைகளை அகற்றவும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 4, 2023 வரை சர்வதேச மூளைக் கட்டி விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டிற்கான மூளைக்கட்டி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட் நிறுவனம் சார்பில் CANCER INSTITUTE [W.I.A] அங்கு சிகிச்சை பெற்று மூளைக் கட்டிகளில் இருந்து தப்பியவர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது.
350 அறுவை சிகிச்சைகள்:
மூளைக் கட்டிகளின் ஆரம்ப அறிகுறிகளாக இடைவிடாத தலைவலி, கைகள் அல்லது கால்களின் அசைவுகள் குறைதல், பார்வைக் குறைவு, வாந்தி மற்றும் செவித்திறன் குறைதல் ஆகியவை இருக்கும். முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையானது மூளைக் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும். அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் 2018 இல் நரம்பியல் அறுவை சிகிச்சை சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து சமீபத்திய உபகரணங்களுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால், விழித்திருக்கும் கிரானியோட்டமி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் நியூரோமோனிட்டரிங் போன்ற மேம்பட்ட அறுவை சிகிச்சைகளும் இங்கு செய்ய முடிகிறது. ஒரு நிறுவப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையாக இருப்பதால், அதே மருத்துவமனையில் தேவைப்படும் இடங்களில் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையை வழங்குவதன் கூடுதல் நன்மையை இங்கு கிடைக்கிறது.
மேலும், இந்த கருத்தரங்கில் மூளைக்கட்டிகளுக்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சி்கிச்சைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் மூத்த மருத்துவர்கள், முக்கிய மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். அடையாறு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பதாகைகளுடன் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.













