தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக இருந்த லியோ கடந்த வாரம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கம், எல்.சி.யு., நட்சத்திர பட்டாளங்கள் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மேலாக இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்.
ஏமாற்றிய லியோ:
விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், லியோ ரோலக்சை விட பெரிய ஆளா? என்ற கேள்வியுடனே ரசிகர்கள் திரைப்படத்திற்கு வந்தனர். ஆனால், முதல் பாதியை அட்டகாசப்படுத்திய லோகேஷ் கனகராஜ் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் படம் வசூலே சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், பல விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை லியோ பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
எல்.சி.யு.வில் இணைக்க வேண்டுமென்று சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், சிலரை வீணடித்திருப்பதற்காகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜின் படமாக இது வராதது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியே ஆகும்.
தலைவர் 171
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் சூழலில் அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். லியோ படம் லோகேஷ் கனகராஜிற்கு பெறும் சறுக்கலாக அமைந்துள்ள நிலையில், கட்டாயம் கம்பேக் தர வேண்டிய சூழலில் லோகேஷ் உள்ளார்.
ஏற்கனவே, தலைவர் 171 எல்.சி.யு.வாக இருக்காது என்று லோகேஷ் கூறியிருந்த நிலையில், நிச்சயம் தன்னுடைய கம்பேக் படமாக தலைவர் 171-ஐ உருவாக்க லோகேஷ் முழுமூச்சில் இறங்கியுள்ளார். தன்னுடைய படமாக இந்த படம் உருவாக வேண்டும் என்பதில் முழு கவனமாக உள்ள லோகேஷ் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் தீனி போடும் விதமாக படத்தை உருவாக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்.
கம்பேக் தருவாரா?
ஜெயிலர் வெற்றி மூலம் தான் என்றுமே சூப்பர்ஸ்டார் என்று நிரூபித்துள்ள ரஜினிகாந்த், ஜெய்பீம் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் நிச்சயம் சமூகம் சார்ந்த படமாக இருக்கும் என்பதாலும். ரஜினிகாந்தின் கெட்டப்களும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருப்பதாலும் ரஜினியும் மீண்டும் தன் வெற்றியை தக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கம்பேக் படமாக ரஜினிகாந்த் 171 –ஐ உருவாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.













