தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை தவிர பிற கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனப்பான்மையை கொண்டதாகவே உள்ளது.
கற்பனையில் கூட அழிக்க முடியாது:
இந்த நிலையில், சென்னையில் இன்று நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது, “தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல. கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். திமுகவை கற்பனையில் கூட யாராலும் அழிக்க முடியாது.
பாஜக தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஏன் மனித குலத்திற்கே எதிரான இயக்கம். என்னுடைய மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் விரும்பவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு அல்ல.
இப்போது கலைஞரின் பாரசக்தி வசனம்தான் உங்களுக்கு பதில். ‘கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது”
நீட் விலக்கு மசோதா:
இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பியதும், அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஏராளமான மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்திற்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.













