தொழில்நுட்பம், விஞ்ஞானம் என உலகம் இன்று கடந்த நூற்றாண்டை காட்டிலும் நடப்பு நூற்றாண்டின் வெறும் 23 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பதே உண்மை. ஆனால், இந்த வளர்ச்சியை வைத்து மனிதர்கள் அன்பையும், அரவணைப்பையும் வளர்த்துக் கொள்ளத் தவறவிட்டோம் என்பதையே இன்றைய சூழலில் எடுத்துக் காட்டுகிறது.
போரின் கோரம்:
இன்றைய நிலையில், உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் படு மோசமான நிலையில் இருக்கிறது என்பதே உண்மை. வெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் மட்டும் பார்த்துக் கொண்டு இதுதான் உலகம் என்று சிலர் வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழலில், சற்று இந்தியாவை விட்டு எட்டிப் பார்க்க வேண்டியது அவர்களின் அவசியமும் ஆகும்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் ஏற்பட்ட உக்கிரமும் சோகமும் உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி வரும் சூழலில், தற்போது தொழில்நுட்பத்தில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது.
சுற்றிலும் ரத்த வாடை:
காசாவில் உள்ள ஹமாஸ் குழுவிற்கும், இஸ்ரேலுக்கும் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல் தற்போது போராக உருவெடுத்துள்ளது. போர் தொடங்கிய இரண்டு, மூன்று நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் ஒரு முனையில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மறுமுனையில் லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலிலும், காசாவிலும் குண்டு மழை மாறி, மாறி பொழிந்து வருவதால் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கட்டுப்பாடுகள் மேல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களின் அத்தனை உரிமைகளையும் பறித்து வருகின்றனர். அவர்களின் சட்டங்களும், கட்டுப்பாடுகளும் மற்ற நாட்டில் உள்ள அனைவரையும் வேதனைக்கு ஆளாக்கி வருகிறது.
பட்டினி சாவு:
அபரிதமாக உணவுகளை பல நாடுகள் உற்பத்தி செய்தும், நம்மில் பலர் தினமும் உணவுகளை வீண் செய்து வரும் அதே சூழலில் இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளில் பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடிதான் வருகிறது. போரின் கோரத்தை நிறுத்த வேண்டிய சக்திவாய்ந்த நாடுகள் ஆளுக்கொரு திசையில் நிற்கின்றன. பட்டினி சாவுகளை நிறுத்த வேண்டிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து என்ன வருவாய் எடுக்கலாம்? என்று கணக்குப் பார்க்கின்றன.
ஏன், 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி காலடி எடுத்து வைத்தும், நிலவுக்கு சந்திரயானை அனுப்பியும் தொழில்நுட்பத்தில் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நம் இந்தியாவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைத்துவிட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்பதை நாம் அறிவோம்.
ஜி20 மாநாட்டிற்கு டெல்லி வந்த அமெரிக்க, சீன, பிரேசில், கனடா என உலக நாடுகளின் தலைவர்களின் கண்களில் அங்குள்ள சாதாரண குடியிருப்புகள் பட்டுவிடக்கூடாது? என்பதற்காக திரை கட்டி மறைத்த அவலமும் அரங்கேறத்தான் செய்தது.
மனிதம் எங்கே?
இப்படி உலகின் வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டி கொள்ளும் பல நாடுகளும், வளரும் நாடுகளும் தங்களின் அதிகார வெறிக்காக அப்பாவி மக்களின் உயிர்களை இரையாக்கும் அவலம் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து மனிதத்தை தழைத்தோங்க செய்ய இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ?













