உலகக்கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய சுழலுக்கு தடுமாறி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேஸ் மாஸ்டர்:
இதையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பறிபோனது. கேப்டன் ரோகித்சர்மா, இஷன்கிஷன், ஸ்ரேயாஸ் டக் அவுட்டாகினர்.
அதன்பின்பு, மிக மிக நெருக்கடியான சூழலில் விராட்கோலி – கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். மிக நேர்த்தியாக ஆடி இலக்கை நோக்கி இருவரும் முன்னேறினர். சேஸ் மாஸ்டர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி, தான் களத்தில் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக அசத்தலான இன்னிங்சை ஆடினர்.
அதி அற்புதமான ஆட்டம்:
அவருக்கு கே.எல்.ராகுலும் சிறந்த ஒத்துழைப்பு தர 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா இலக்கை நோக்கி மெல்ல முன்னேறியது. மிக அருமையாக ஆடிக்கொண்டிருந்த விராட்கோலி சதம் அடிப்பார் என்று காத்திருந்த தருணத்தில், 85 ரன்களில் அவுட்டானார். ஆனால், அப்போதே இந்தியாவை வெற்றியின் மிக அருகில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.
அதன்பின்பு, எந்த சிரமும் இல்லாமல் கே.எல்.ராகுல் இந்தியாவை வெற்றி பெற வைத்துவிட்டார். கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது தனி ஆளாக போராடி இந்தியாவை விராட் கோலி வெற்றி பெற வைத்த இன்னிங்சிற்கு சமமான இன்னிங்ஸ் இந்த இன்னிங்ஸ் ஆகும்.
ஆபத்பாந்தவன்:
இந்திய அணியின் இளம் வீரர்கள் பலருக்கும் நெருக்கடியான சூழலில் ஆட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் இன்னும் தடுமாற்றம் இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் விராட்கோலி நேற்று தான் ஆடிய இன்னிங்ஸ் மூலம் பாடமே நடத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
விராட்கோலி சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தாலும், இந்த உலகக்கோப்பையை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது என்பதும், விராட்கோலி நெருக்கடியான நேரத்தில் மீண்டும் ஆபத்பாந்தவானாக மாறியதும் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி ஆகும்.














