உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியை நடத்தும் இந்தியா இன்று தனது முதல் போட்டியில் ஆடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு ஆடுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா:
இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இந்த போட்டியே முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்திய அணியில் ஆடும் பல வீரர்களுக்கும் சென்னை மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய அனுபவம் இருப்பதால் அது அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காய்ச்சல் காரணமாக சுப்மன்கில் இன்றைய போட்டியில் ஆட மாட்டார். அவருக்கு பதிலாக இஷான் அல்லது கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலமாக ரோகித்சர்மா – விராட்கோலி உள்ளனர். இவர்கள் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இரு அணியின் பலம்
மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்மித் அனுபவ வீரர்களாக உள்ளனர். லபுஷேனே, மேக்ஸ்வெல், கிரீன் சிறப்பாக ஆடினால் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
இந்திய பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ் பக்கபலமாக உள்ளனர். ஷமியா? ஷர்துல்லா? என்பது போட்டியில்தான் தெரிய வரும். அஸ்வின் ஆடும் லெவனில் இருப்பார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சிற்கு கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஜம்பா, கிரீன், மேக்ஸ்வெல் பக்கபலமாக உள்ளனர். மொத்தத்தில் இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும்.














