ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி இன்று காலிறுதியில் நேபாள அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் – ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கம் அளித்தனர். குறிப்பாக, ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால தொடக்கம் நான்தான் என்பது போல ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். மறுமுனையில் ருதுராஜ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.
ஜெய்ஸ்வால் சதம்:
அரைசதம் கடந்தும் ஜெய்ஸ்வால் ருத்ரதாண்டவம் ஆடினார். 9.5 ஓவர்களில் 103 ரன்கள் இந்தியா எட்டியபோது கேப்டன் ருதுராஜ் 25 ரன்களில் அவுட்டானார். பின்பு வந்த திலக் வர்மா 2 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் அவுட்டானார்கள். ஆனாலும், தனி ஆளாக வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். பின்னர், 49 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 100 ரன்களை எட்டியபோது அவர் அவுட்டானார். அப்போது இந்தியாவின் மொத்த ஸ்கோரே 150 ரன்களாக இருந்தது.
கடைசியில் ஷிவம் துபே – ரிங்குசிங் ஜோடி சேர்ந்தனர். இந்தியாவின் நம்பிக்கையான ஃபினிஷர் என்ற அவதாரம் எடுத்துள்ள ரிங்குசிங் சிக்ஸர் மழை பொழிந்தார்.
ரிங்கு சிங் காட்டடி:
ஷிவம் துபேவும் அதிரடி காட்ட இந்தியா ஸ்கோர் கடைசி கட்டத்தில் எகிறியது. கடைசியில் 20 ஓவர்கள் இழப்பிற்கு இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்தது.
ஷிவம் துபே 19 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்களுடனும், ரிங்குசிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
203 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நேபாள அணியின் தொடக்க வீரர் ஆசீப் ஷேக் 10 ரன்களில் அவுட்டாக, குஷல் பர்டேல் – குஷல் மல்லா நிதானமாக ஆடினர்.
இந்தியா வெற்றி:
நிதானமாக ஆடிய குஷல் பர்டேல் 28 ரன்களில் அவுட்டாக, குஷல் மல்லாவும் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் 3 ரன்களில் அவுட்டானார். 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நேபாள அணிக்காக தீபேந்திரசிங் – சுந்தீப் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிக்ஸர்களாக விளாசினர். இருவரும் இணைந்து 7 சிக்ஸர்கள் அடித்தனர். 122 ரன்களை எட்டியேபாது 15 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி 32 ரன்கள் எடுத்த தீபேந்திரா அவுட்டானார். அடுத்த சில நிமிடங்களில் 12 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 29 ரன்கள் எடுத்த சுந்தீப்பும் அவுட்டானார்.
கடைசியில் நேபாள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.














