இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நவராத்திரி பண்டிகை ஆகும். வட இந்தியா, தென்னிந்தியா என நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நவராத்திரி:
நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். மகிஷாசுரன் என்ற அரக்கனை கல்வித்தாய் சரஸ்வதி, செல்வத்தின் தேவியான மகாலட்சுமி மற்றும் வீரத்தின் தெய்வமான சக்திதேவி ஆகிய மூன்று பேரும் ஒன்றாக இணைந்து மகிஷாசுரவர்த்தினியாக அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்ததே நவராத்திரி பண்டிகை ஆகும்.
நவராத்திரி பண்டிகையானது ஒவ்வொரு தெய்வங்களுக்கும் 3, 3 நாட்களாக பிரித்து கொண்டாடப்படுகிறது. முதல் 3 நாட்கள் வீரத்தின் அடையாளமான துர்காதேவியின் வழிபாட்டிற்கு உரிய நாட்கள் ஆகும். இந்த நாளில் துர்க்கை அம்மனுக்கான வழிபாடு செய்யப்படும். அடுத்த 3 நாட்கள் செல்வத்தின் தேவி மகாலட்சுமிக்கான வழிபாடு ஆகும். கடைசி 3 நாட்கள் கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு வழிபாடு நடத்தப்படும்.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி:
தமிழ்நாட்டில் நவராத்திரி பண்டிகையில் வரும் ஆயுதபூஜை, விஜயதசமி மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். குறிப்பாக, ஆயுதபூஜையன்று செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் அவரவர் தாங்கள் செய்யும் தொழில்களை வணங்கி வேண்டிக் கொள்வார்கள். உழைப்பை போற்றும் நாளாகவே ஆயுதபூஜை கருதப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி பண்டிகையன்று முதன்முறையாக பள்ளி செல்லும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள். பல சிறப்புகளை கொண்ட நவராத்திரி வரும் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. நவராத்திரி பண்டிகையின்போது வீடுகளில் கொலு பண்டிகை கோலாகலமாக நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.














