நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இப்போது முதல் தங்கள் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தங்களது பணியை தீவிரமாக செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ஜ.க.வுடனான கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை டெல்லி பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 18-ம் தேதி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மடியில் கனம் இருப்பவர்களுக்குதான் வழியில் பயம் இருக்கும். 1972 முதல் அதிமுக எத்தனையோ சோதனைகளை கடந்து வந்துள்ளது.
ஜெயலலிதா மீதும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் கட்சியில் தொய்வு ஏற்படவில்லை. எங்கள் கடமையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே அதிமுகவின் பணி. மத்திய முகமைகள் சோதனை போன்ற பூச்சாண்டிகளுக்கு அதிமுக பயப்படாது.” இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதல் கட்சியில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது, ஓ.பி.எஸ். – தினகரன் கூட்டணி வைத்தது என்று தொடர்ந்து பல சிக்கல்கள் அ.தி.மு.க.வில் இருப்பது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.














