ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த வார்னர், ஸ்மித், லபுஷேனே, கிரீன், இங்கிலிஷ், ஸ்டோய்னிஸ் ஆகியோர் பங்களிப்பில் அவர்கள் 276 ரன்களை குவித்தனர்.
277 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் – சுப்மன்கில் ஜோடி மிகவும் சிறப்பான தொடக்கத்தை தந்தது. இவர்கள் இருவரும் கம்மின்ஸ், ஸ்டோய்னிஸ், அப்பாட், கிரீன் ஆகியோர் பந்துவீச்சை மிக அருமையாக எதிர்கொண்டனர். இருவரும் அரைசதம் கடந்து அபாரமாக ஆடிய நிலையில் ஜம்பா இருவரையும் அவுட்டாக்கினார்.
ஸ்ரேயாஸ் சொதப்பல்:
இதன்பின்பு, முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 3 ரன்களில் ரன் அவுட்டானார். கடந்த பல மாதங்களாக காயத்தில் இருந்து வந்த ஸ்ரேயாஸ், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு நேரடியாக ஆசியகோப்பையில் களமிறங்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலும் சொதப்பினார்.
அதன்பின்பு, நேற்று நடந்த போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நட்சத்திர பேட்ஸ்மேனாக வருவார் என்று ரசிகர்களால் ஆவலுடன் நம்பப்படும் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரேயாஸ் இதேபோன்ற ஆட்டத்தை தொடர்ந்து வௌிப்படுத்தினால் நிச்சயம் மீண்டும் அணியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
உலகக்கோப்பை:
ஏனென்றால், திறமை வாய்ந்த பலரும் இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் சூழலில் தொடர்ந்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்துவது அணிக்கு நல்ல சூழலை ஏற்படுத்தாது. இந்த 2023ம் ஆண்டில் அவர் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதில் 5 போட்டிகளிலுமே அவுட்டாகியுள்ளார். வெறும் 111 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
29 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 1043 ரன்களை எடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் முக்கியத்துவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் ஸ்ரேயாஸ் அய்யரின் ஃபார்மிற்கு உடனே திரும்ப வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.














